Header Ads

புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?



 புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

உறையூர் குழுமணி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மீன் மார்க்கெட்

திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் காந்திமார்க்கெட் செயல்படுவதுபோல் புத்தூர் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டுக்கு தினமும் கடலோர பகுதிகளான புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கன்டெய்னர் லாரிகளில் டன் கணக்கில் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இது தவிர கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்த மீன் மார்க்கெட்டில் அதிகாலை நேரத்தில் மொத்த வியாபாரிகள் மீன்களை கிலோ கணக்கில் ஏலம் மூலம் வாங்கி சென்று மாநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்கள். இங்கிருந்து ஓட்டல்களுக்கும், பிற பகுதிகளில் உள்ள சிறிய மீன் மார்க்கெட்டுகளுக்கும் மீன்கள் கொண்டு செல்லப்படுகிறது. புத்தூர் மீன்மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் நடைபெற்று வந்தாலும், அன்றாடம் பொதுமக்களும் ஏராளமானோர் சென்று சில்லறை விலையிலும் மீன்களை வாங்கி செல்கிறார்கள்.

உறையூர் குழுமணி சாலையில்...

திருச்சியில் புத்தூர் மீன்மார்க்கெட் பெரிய அளவில் செயல்பட்டு வந்தபோதிலும், இங்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகளை நிறுத்துவதற்கும், மீன் கழிவுகளை கொட்டுவதற்கும் போதிய இட வசதியில்லாமல் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும் மீன்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்லும்போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் புத்தூர் மீன்மார்க்கெட்டை போக்குவரத்து நெருக்கடி இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி உறையூர் குழுமணி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய மீன்மார்க்கெட் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

திறப்பு விழா எப்போது?

தற்போது அங்கு ரூ.3 கோடியே 32 லட்சம் செலவில் புதிதாக மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் கழிவுகளை அப்புறப்படுத்தும் வசதி, வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, தண்ணீர் வசதி போன்றவற்றுடன் அமைக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் காந்திமார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட உள்ளதுபோல், தற்போது புத்தூர் மீன்மார்க்கெட்டும் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க புதிய மீன்மார்க்கெட் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, திறக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source:http://www.dailythanthi.com/News/Districts/2017/09/25022910/Will-construction-of-new-fish-market-be-completed.vpf

No comments

Powered by Blogger.