Header Ads

திருச்சி மக்களை குதூகலிக்கச் செய்த 'கார் ப்ரீ சண்டேஸ்'





திருச்சி: மாநகர காவல்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இணைந்து நடத்தும் 'கார் ப்ரீ சண்டேஸ்' நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், உற்சாகமாக பங்கேற்றனர்.

வாரநாட்களில் பணிக்குச் செல்வோர் மற்றும் இல்லத்தரசிகளும் வேலைப்பளு மற்றும் பல்வேறு சுமைகளில் தங்களை ஆட்படுத்திக்கொண்டு மனஅழுத்தம் மற்றும் மனசோர்வுகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல… பள்ளிநேரம் கடந்து மாலையில் டியூசன் படிப்பு என தங்களையும் சிறு வயதிலேயே மனஅழுத்தத்திற்கு தயார்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற மனஅழுத்தம் கோபம், உடல்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களுக்கு கொண்டுசெல்லும் என்பதை அறிந்தும் அதிலிருந்து தங்களை விடுவித்திக்கொள்ள முடியாத சூழலில் உழன்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.

இவர்களைப்போன்று சுமைகளால் தத்தளிப்போரின் மனச்சுமை மற்றும் உடல்சுமையினை போக்கும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இணைந்து “கார் ப்ரீ சண்டேஸ்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள தென்னூர் அண்ணாநகர் சாலையினை கையகப்படுத்தி உடல் பயிற்சி மற்றும் உடல்நலம்  பேணுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதனை மாநகர காவல் ஆணையர் அருண் பங்கேற்று தொடங்கிவைத்தார்.

இன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி 3மாதங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படும் காலை 6மணி முதல் 9மணி வரை நடைபெற உள்ளது.

இந்த விழிப்புணர்வு மற்றும் புத்துணர்வு நிகழ்வில் உடல்நலம் பேணுதல் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் முறைகள், யோகாசன நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பெண்களுக்கான தற்காப்பு மற்றும் செயல் விளக்கம், சிலம்பாட்டம் மற்றும் தற்காப்பு கலைகள், ஸ்கேட்டிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறியது.

இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுரசித்ததோடு, ஒவ்வொரு நிகழ்விலும் தங்களை ஈடுபடுத்தி மகிழ்ந்தனர்.

குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள் குழந்தைகளுடன் கொஞ்சி, விளையாட கற்றுக்கொடுத்து மகிழ்ந்ததையும் காணமுடிந்தது.

பலர் தங்களது செல்போன்களில் நிகழ்வுகளை பதிவுசெய்ததோடு, கைகளைத் தட்டி உற்சாகப்படுத்திய இன்றைய தருணங்கள் மறக்கமுடியாத மகிழ்வான தருணங்களாக அமைந்திருப்பதை அவர்களின் முகமலர்ச்சியிலிருந்து காணமுடிந்தது.

தொடர்ந்து 3மாதங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த கார் ப்ரீ சண்டேஸ் நிகழ்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமையை எதிர்நோக்கி காத்திருக்க தயாராகிவிட்டார்கள் திருச்சி மாநகர மக்கள் புத்துணர்வு பெறுவதற்காக என்றால் அது மிகையாகாது.

No comments

Powered by Blogger.