Header Ads

தூய்மையை பேணிக்காக்க வீடுகளில் தனிநபர் கழிவறை கட்டாயம்

Related image
(File Photo)

தூய்மையை நாம் பேணிக்காக்க அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிவறை வருகிற நவம்பர் 30ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்திய கலெக்டர் ராஜமணி அரசு மானியமாக ரூ.12ஆயிரம் வழங்கப்படுகிறது  என்று தெரிவித்தார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை ஊராட்சி, பழங்காவேரி பயிற்சி மையத்தில், பெட்டவாய்த்தலை ஊராட்சி செயலர் ஜெகதீசன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. இதில் திருச்சி கலெக்டர் ராஜாமணி பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:கிராம ஊராட்சிகள் மூலம் அடிப்படை வசதிகள் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்வதே கிராமசபை கூட்டத்தின் நோக்கம்.

மாவட்டத்தில் நவம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிவறை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அரசின் சார்பில் தனிநபர் கழிவறைக்காக ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.இதுவரை தனிநபர் கழிவறை அமைக்காதவர்கள் உடனடியாக தங்கள் வீட்டில் நவம்பர் 30க்குள் தனிநபர் கழிவறை அமைக்க வேண்டும். அப்போது தான் தூய்மையை நாம் பேணிக் காக்க முடியும்.  இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று பாரதிநகர், மாதா கோயில் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும். சுகாதார வளாகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, ரங்கம் ஆர்டிஓ ராஜராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் லதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வகணபதி,  ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, ரங்கம் தாசில்தார் சண்முகம், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=766681

No comments

Powered by Blogger.