Header Ads

முக்கொம்பு சுற்றுலா தலத்தில் பயன்பாட்டுக்கு வராதசிறுவர் ரயில் செயற்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம் ரூ.3.5 கோடி நிதி வீணாகும் அவலம்


Related image
திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் ரூ.3.5 கோடி நிதியில் நவீனப்படுத்தப்பட்டு 2 வருடமாக பயன்பாட்டுக்கு வராத  சிறுவர் ரயில், செயற்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லத்தை  பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரிலிருந்து வரும் காவிரி ஆற்று நீரை தேக்கி வைக்க திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து காவிரி, கொள்ளிடமாக ஆறு பிரிந்து செல்கிறது. காவிரி ஆற்றில் பாசனத்திற்காகவும், கொள்ளிட ஆற்றில் வெள்ள காலங்களில் கடலில் சென்று கலப்பதற்காக  தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் முக்கொம்பு அணைப்பகுதியில் பூங்கா வசதியும் ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாக முக்கொம்பு விளங்கியது. இங்கு அணையை கண்டுகளித்து பூங்காவில் பொழுதுபோக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத்துவங்கினர். 

இதையடுத்து முக்கொம்பு சுற்றுலா தளத்தை விரிவுபடுத்த கடந்த 2012ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா சுற்றுலா மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.5கோடி நிதி ஒதுக்கினார். இதையடுத்து ரூ.55லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் ரயில் வசதி, ரூ.35லட்சம் மதிப்பீட்டில் செயற்கை நீர்வீழ்ச்சி, ரூ.8லட்சத்தில் சிறுவர் படகு இல்லம் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான பணிகள் அனைத்தும் கடந்த 2015ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால் தற்போது 2 வருடங்கள் ஆனநிலையில் இவைகள் எதுவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. இது குறித்து பொதுப்பணிததுறை வட்டாரத்தில் தலைமை செயலருக்கு அறிக்கை அனுப்பி அதன்மூலம் இதற்கு உரிய பயன்பாட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இன்னும் பயன்பாட்டு கட்டணம் குறித்து எந்தவித பதிலும் தலைமை செயலர் அனுப்பவில்லை என்ற காரணத்தை இன்று வரை கூறிவருகின்றனர். இது பயன்பாட்டிற்கு வராததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் திறக்கப்படாமலேயே அவைகள் பழுதாகும் நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இதை உடனடியாக திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு அமைப்பின் சார்பில் பொதுஇடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

இது குறித்து அதன் மாவட்ட செயலாளர் அய்யாரப்பன் கூறுகையில், பொதுப்பணித்துறை அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல், தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்துள்ளது. இதன் காரணமாக முக்கொம்பில் தனியாரால் தண்ணீர் பலூன், சறுக்கு, ராட்டினம், பொம்மை விளையாட்டு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு தனியார் அமைப்புகள் லாபம் பார்த்து வருகிறது. ஆனால் அரசின் நிதியில் கட்டப்பட்டு பொழுது போக்கு அம்சமோ திறக்கப்படாமலேயே வீணாகி வருகிறது. எனவே அரசின் நிதியில் கட்டப்பட்ட பொழுது போக்கு அம்சங்களை திறந்து அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Source:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=766689

No comments

Powered by Blogger.