Header Ads

ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர விழா தொடங்கியது யாகசாலை பூஜையில் பக்தர்கள் குவிந்தனர்

ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர விழா தொடங்கியது யாகசாலை பூஜையில் பக்தர்கள் குவிந்தனர்

கங்கை, யமுனை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் நடைபெறுவதை போன்று, காவிரியின் ராசியான துலாம் ராசியில் நடைபெறும் விழாவுக்கு காவிரி புஷ்கரம் என பெயர்.

குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும்போது, துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழா என்பதால் காவிரி மகா புஷ்கரம் என அழைக்கப்படுகிறது. காவிரி மகா புஷ்கர விழா திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி கரையில் நேற்று தொடங்கியது.

காவிரி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் அருகே உள்ள மாமுண்டி கோனார் திடலில் கடந்த மாதம் 24–ந் தேதி யாகசாலை பந்தல்கால் நடும் விழா நடப்பட்டது. அதனை தொடர்ந்து யாகசாலை மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை யாகசாலையில் வாஸ்து பூஜை நடைபெற்றது.

பின்னர் மாலை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரங்கா, ரங்கா கோபுரத்திலிருந்து ஆதிநாயகப்பெருமாள், தாயாருடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டு, நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து ராஜகோபுரம் வழியாக அம்மா மண்டபம் அருகில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் உள்ள யாகசாலைக்கு வந்தடைந்தது.

காவிரி மகா புஷ்கர விழாவின் தொடக்க நாளான நேற்று காலை 6.45 மணிக்கு அம்மாமண்டபம் அருகில் மாமுண்டி கோனார் திடலில் உள்ள யாகசாலையிலிருந்து மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோபராமானுஜ ஜீயர், காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டியினர் மற்றும் வேத விற்பன்னர்கள், மங்கலப் பொருட்களுடன் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்தடைந்தனர்.

பின்னர் அங்கு காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீராடினர். இதனை தொடர்ந்து பக்தர்களும் புனித நீராடினர். அங்கிருந்து புனித நீர் கலசங்களில் சேகரிக்கப்பட்டு, ஊர்வலமாக யாகசாலைக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு புனித நீர் உள்ள கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 8.45 மணியளவில் யாகசாலை முன் கோ பூஜை நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதன் பின்னர் மரங்களில் கயிறு மூலம் உராய்வு ஏற்படுத்தி, அக்னிமதனம் என்ற யாகத்திற்கு நெருப்பு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காரியசித்தி மற்றும் தடங்கல்களை நீக்கும் ஹோமம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜைகள் முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் நேற்று இரவும் யாகசாலை பூஜைகள் நடந்தன. நாம் வாழும் உலகம் வன்முறையில் இருந்து மீண்டு அமைதி நிலவுவதற்காகவும், மனிதர்கள் துன்பம் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வதற்காகவும், வறண்ட காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடி, மண்வளம் பெருகி பயிர்கள் செழித்து வளர்வதற்காகவும் வருகிற 23–ந்தேதி வரை தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் இந்த யாக சாலை பூஜைகள் நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்தனர். ஜீயர்கள், வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை படித்தனர்.

யாகசாலை பூஜையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாகசாலை பூஜையில் பங்கேற்ற அவர்கள் காவிரியில் புனித நீராடினார்கள்.

காவிரி கரை அம்மா மண்டபம் படித்துறையில் கால் நனையும் அளவிற்கே மிகவும் குறைவாக தண்ணீர் செல்வதால், பல பக்தர்கள் தண்ணீரை கையில் எடுத்து தலையில் தெளித்துக்கொண்டனர். பல பக்தர்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகளில் குளித்து புனித நீராடினார்கள்.

காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்ரீரங்கத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சுகாதார துறை சார்பில் 15 டாக்டர்கள், 15 செவிலியர்கள் மற்றும் 15 பணியாளர்கள் கொண்ட ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டு, அவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். உடல் பரிசோதனை செய்து அதற்கான சிறப்பு முதலுதவியுடன் சுகாதார சேவை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் போதிய மருந்துகள் மற்றும் அவசர சிகிச்சைக்கான உபகரணங்களும் கையிருப்பில் உள்ளது. படித்துறைகளில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது, தேவைப்படுமாயின், மேலும் சிகிச்சைக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக்குழு மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்களை கொண்டு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று மருத்துவ குழுவும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது.

வருகிற 23–ந்தேதி வரை நடைபெற உள்ள காவிரி மகா புஷ்கர விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட முக்கிய பிரமுகர்கள் வர இருப்பதாகவும், அவர்கள் வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விழா கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source:http://www.dailythanthi.com/News/Districts/2017/09/12235650/The-Cauveri-Maha-Pushkara-ceremony-started-in-Srirangam.vpf

No comments

Powered by Blogger.