Header Ads

ஸ்ரீரங்கத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகா புஷ்கர விழா அடுத்த மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது



 ஸ்ரீரங்கத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகா புஷ்கர விழா அடுத்த மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது

புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்தகுரு, ஆதிகுரு என்று பொருள்படும். இந்த விழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறும். மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கரமானவர் குருப் பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாட்கள் பிரவேசம் செய்வதாகவும், குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயரும் போது துலாம் ராசிக்கு உரியவரான காவிரி நதியில் புஷ்கரமானவர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை வாசம் செய்வதாக ஐதீகம். இந்தியாவில் உள்ள கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபுத்ரா, சிந்து, பிராணஹிதா என்ற 12 நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி காவிரியில் இந்த புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால் காவிரி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

காவிரி நதியின் ராசி துலாம் ராசியாக இருப்பதாலும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகா புஷ்கரம் வருவதாலும் காவிரி பாயும் எல்லா இடங்களிலும் அரசு உதவியுடன் இந்த புஷ்கர விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாவில் 25 ஜீயர்கள் பங்கேற்க உள்ளனர்.

விழா நடைபெறும் நாட்களில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். பக்தர்கள் வந்து தங்கி செல்வதற்கான முன்னேற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் செய்ய உள்ளது. இந்த புஷ்கர விழாவுக்காக ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலையில் உள்ள கோனார் சத்திரத்திற்கு எதிரே உள்ள இடத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதையொட்டி அம்மாமண்டபம் சாலையில் உள்ள கிருஷ்ண மகாலில் விழா கமிட்டி சார்பில் அலுவலகம் திறக்கப்படுகிறது. இந்த மகா புஷ்கரம் எல்லா ராசிக்காரர்களுக்கும் உகந்தது என்றாலும் கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

மேஷம், மிதுனம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மத்திய பலனாக இருந்தாலும் பரிகாரம் செய்ய வேண்டும். புஷ்கரம் நடக்கும் புண்ணியகாலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால் இந்த புண்ணியகாலங்களில் நதியில் நீராடுவதால் 3½ கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும். அப்போது அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழிவகுக்கும். புஷ்கர புண்ணியகாலத்தில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்தால் சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என நம்பப் படுகிறது. 

Source:http://www.dailythanthi.com/News/Districts/2017/08/20004357/The-Cauveri-Maha-Pushkara-ceremony-begins-on-the-12th.vpf

No comments

Powered by Blogger.